இந்த தொடரில் ரூபி ( லைலா)யின் மகளான வெலோனி (புதுமுக நடிகை சஞ்சனா) ஆள் அரவமற்ற வனப்பகுதி ஒன்று சடலமாக கிடக்கிறார். காவல்துறைக்கு தகவல் சென்றவுடன் அவர்கள் வருகை தந்து, பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து, யார்? என விசாரிக்க தொடங்குகிறார்கள். அந்த பகுதியில் படப்பிடிப்பிற்காக வருகை தரும் படக்குழுவினர், பெண்ணின் சடலத்தை தோராயமாக பார்த்துவிட்டு இறந்தது எங்கள் படத்தின் கதாநாயகி என ஒரு தகவலை தெரிவிக்கிறார்கள். இது காட்சி ஊடகத்தின் மூலம் உடனடியாக பரவுகிறது. பிறகு அது ‘வதந்தி’ என தெரிய வருகிறது. அதாவது பொய் என தெரிய வருகிறது. அதன் பிறகு இறந்து கிடந்த பெண் வெலோனி என்றும், அவள் கன்னியாகுமரியில் விடுதி ஒன்றினை நடத்தி வரும் ரூபியின் மகள் என்றும் தெரிய வருகிறது. அதன் பின்னர் உயர் நீதிமன்ற நீதியரசர் காவல்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு, இந்த வழக்கு குறித்த தகவல்களை கேட்டறிகிறார். அத்துடன் காவல்துறை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விவேக் ( எஸ். ஜே. சூர்யா) எனும் காவல்துறை அதிகாரி ஒருவரின் தலைமையில் தனிப்படையை அமைக்கிறார். அவர் இந்த வழக்கினை எடுத்துக்கொண்டு விசாரித்து உண்மையை கண்டறிந்தாரா? இல்லையா? என்பதும், உண்மையான கொலை குற்றவாளி யார்? என கண்டறிவதும் தான் இந்த நெடும் வலைதள தொடரின் கதை.
மர்மமான முறையில் இறந்த நாயகி வெலோனி எனும் பெயர் கொண்ட சஞ்சனாவின் வழக்கை விசாரிக்க வரும் உதவி ஆய்வாளர் வேடத்தில் நாயகன் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். வழக்கத்துக்கு மாறாக அமைதியாக அழுத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார். விசாரணைக்காட்சிகள், துப்பறியும் காட்சிகள் ஆகியனவற்றைவிட மனைவியுடனான ஊடல் கூடல் காட்சிகளில் அவர் நடிப்பு சிறப்பு.
கதையின் நாயகியான சஞ்சனா, இளமையும் அழகும் நிறைந்த அழகி. அப்பாவித்தனமான முகம் வெள்ளந்தியான சிரிப்பு, அன்புக்கு ஏங்கும் ஏக்கம் ஆகியனவற்றைக் கண்களிலேயே காட்டியிருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறார் லைலா. அவருடைய உருவத்துக்கேற்ப ஆங்கிலோ இந்தியப் பெண் வேடம். அவரும் தொடர் நெடுக ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருக்கிறார்.கணவரை இழந்து இரு பெண்ணுடன் தனியாக வாழும் தாயின் உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
வெலோனி வழக்கை விசாரிக்க வரும் இன்னொரு காவல்துறை உதவி ஆய்வாளராக வரும் விவேக்பிரசன்னா மிக இயல்பாக நடித்து பல இடங்களில் சிரிக்கவைக்கிறார். சில இடங்களில் சிந்திக்க வைக்கிறார்.மனைவிக்கு தோசை சுட்டுப்போடும் காட்சி அழகு.
தொடரில் வரும் எழுத்தாளர் கதாபாத்திரம் அழுத்தமானது.அதற்கு நூறு விழுக்காடு பொருத்தமாக இருக்கிறார் நாசர்.
எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்மிருதிவெங்கட் சிறப்பு. கணவரிடம் கோபித்துக் கொண்டு அப்பா வீட்டுக்குச் செல்லும் காட்சிகள் அருமை.
வெலோனியைத் திருமணம் செய்யப்போகும் இளைஞராக நடித்திருக்கும் குமரன் தங்கராஜன், இக்கால இளைஞர்களின் பிரதிநிதியாக இருக்கிறார்.
ஹரீஷ்பெராடி, அவினாஷ், அஸ்வின்குமார், ஆதித்யா, வைபவ் முருகேசன், அஸ்வின்ராம், அருவி பாலாஜி, திலீப்சுப்பராயன்,குலபுலி லீலா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் சரவணன், கதையைக் காட்சி அனுபவமாக மாற்றக் கடுமையாக உழைத்திருக்கிறார்.
சைமன் கே கிங் இசை தொடரின் தன்மையை உள்வாங்கி உணர்த்தியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ். நாகர்கோயில் வட்டார வழக்கு, கிறித்துவர்களிலேயே பணக்காரர்களின் இறப்பு நடைமுறை, ஏழைகள் வீட்டில் இறப்பு நடைமுறை, காவல்துறையில் இருக்கும் அடுக்குகள் அதன் அளவுகோல்கள், குடும்ப உணர்வுகள், வனங்களை அரசாங்கம் எடுத்துக்கொண்டதால் பாதிக்கப்படும் வனமக்கள் நிலை உள்ளிட்ட ஏராளமான நுட்பமான விசயங்களைத் திரைக்கதைக்குள் வைத்திருக்கிறார்.















