அம்…ஆ திரை விமர்சனம்

0
128

கேரளாவின் மலை கிராமம் ஒன்றில் வசிக்கும் தேவதர்ஷினி, தாய் – தந்தை இல்லாத தனது பேத்தியை வளர்க்கிறார். அவர் மீது அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருக்கும் அவர், அவரை யாரிடமும் பேச விடாமல், பொத்தி பொத்தி வளர்க்கிறார். இதற்கிடையே, அந்த கிராமத்திற்கு வரும் திலீஷ் போத்தன், தேவதர்ஷினி மற்றும் அவரது பேத்தி குறித்து பலரிடம் விசாரிப்பதோடு, இரவு நேரத்தில் அந்த கிராமத்தில் எதையோ தேடுகிறார்.

திலீஷ் போத்தனின் நடவடிக்கை மீது சந்தேகமடையும் கண் தெரியாத முதியவர், அவர் யார்? என்பதை அறிய முயற்சிக்க, மறுபக்கம் தேவதர்ஷினி மலை கிராமத்தில் இருந்து வெளியேறி மருத்துவர் ஒருவரை தேடுகிறார்.

தேவதர்ஷினி மற்றும் அவரிடம் இருக்கும் குழந்தை குறித்து விசாரிக்கும் திலீஷ் போத்தன் யார்?, அவர் எதற்காக தேவதர்ஷினி மற்றும் அவரிடம் இருக்கும் குழந்தை குறித்து விசாரிக்கிறார், என்பதை சஸ்பென்ஸ் திரில்லர் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரைக்கதை மூலம் சொல்வதே ‘அம்…ஆ’.

காமெடி வேடங்களில் நடித்து வந்த தேவதர்ஷினி, முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். அதிகமாக பேசவில்லை என்றாலும், பயம், குழந்தை மீதான பாசம், பனிவு என்று அனைத்து உணர்வுகளையும் தனது மவுனம் மூலமாக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

எதார்த்தமான நடிப்பு மற்றும் தனது திரை இருப்பு மூலம் முதல் பாதி படத்தை மிக சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார் திலீஷ் போத்தன். சாலை பணியின் மேற்பார்வையாளராக கிராமத்தில் நுழையும் திலீஷ் போத்தன், தனது ஒவ்வொரு அசைவுகளிலும், பல மர்மங்கள் மறைந்திருப்பதை வெளிப்படுத்தும் விதமும், அதன் பின்னணி என்னவாக இருக்கும்? என்ற கேள்வியை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தி படத்துடன் ஒன்றிவிடச் செய்து விடுகிறார்.

ஊர் தலைவராக நடித்திருக்கும் ஜாபர் இடுக்கி, மீரா வாசுதேவன், டிஜி ரவி, ஸ்ருதி ஜெயன், அலென்ஸியர், மாலா பார்வதி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் நடிகர்களாக அல்லாமல் அந்த அந்த கதாபாத்திரங்களாகவே நம் மனதில் பதிந்து விடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அனிஷ்லால்.ஆர்.எஸ்-ன் கேமரா மலை கிராமத்தின் ஆபத்தையும், அம்மக்களின் வாழ்க்கையையும் மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, பார்வையாளர்களும் அந்த கிராமத்தில் பயணிக்கும் உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.

இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசையில், மலை கிராம மக்களின் வாழ்வியலை சொல்லும் பாடலும், பின்னணி இசையும் கதைக்களம் மற்றும் கதை மாந்தர்கள் மீதான கவனத்தை திசை திருப்பாமல் பயணித்திருக்கிறது.

ஒரு மலை கிராமம், அங்கிருக்கும் மாறுபட்ட மனிதர்கள், அங்கு புதிதாக வரும் ஒரு நபர் இந்த மூன்றையும் வைத்துக்கொண்டு, பார்வையாளர்களின் முழு கவனத்தையும் திரையின் பக்கம் ஈர்க்கும் வித்தையை மிக சிறப்பாக செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிஜித் பாலா.

கவிபிரசாத் கோபிநாத்தின் எழுத்தும், தாமஸ் செபஸ்டியனின் இயக்கமும் ஒரு சாதாரண கருவை மிக சுவாரஸ்யமான படமாக மாற்றியிருக்கிறது.

முதல் பாதி முழுவதும் சஸ்பென்ஸ் திரில்லராக பயணித்து பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் இயக்குநர் தாமஸ் செபாஸ்டியன், இரண்டாம் பாதியில் குழந்தைக்கும், தாய்மைக்கும் இடையிலான பாசப்போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லி பார்வையாளர்களின் இதயத்தை கனக்கச் செய்யும் இந்த ‘அம்…ஆ’ அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here