ஒரு பெண் பள்ளி பருவத்தில் கொரியா நாட்டு இசை மற்றும் நடனத்தால் கவரப்படுகிறாள், அந்த நாட்டுக்கு ஒரு முறையாவது பயணிக்க வேண்டும் என்ற ஆசையை மனதில் வளர்த்துக் கொள்கிறார். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், கொரியா ஆசையை கைவிடாமல் இருக்கிறார். இதற்கிடையே, சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் கொரியா நாட்டுக்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், மகிழ்ச்சியாக செல்ல நினைத்த அந்த நாட்டுக்கு துயரத்துடன் செல்லும் அவர், அங்கு சென்ற பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துக் கொள்கிறார். பெற்றோரின் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறி காதலரால் ஏமாற்றப்பட்டு, திரும்பவும் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார். தான் பயணிக்க ஆசைப்பட்ட நாட்டில் இருந்தாலும், புரியாத மொழி, அறியாத மக்கள் என அச்சத்தில் கலங்கி நிற்கிறாள் , இதன் பின் அவளது வாழ்வில் என்ன ஆனது என்பதே இந்த ‘மேட் இன் கொரியா’ படத்தின் கதை.
இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா அருள் மோகன், தனது நடிப்பு மூலம் படம் முழுவதையும் தனி ஆளாக சுமந்திருக்கிறார். இயற்கை எழில் மிகு ஊட்டி மற்றும் நவீனமயமான கொரியா, என இரண்டு வெவ்வேறு களங்களில் காட்சிகள் பயணித்தாலும், கதையை புரிந்து கொண்டு சிறப்பாக தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியுள்ளார். படத்தில் இருக்கும் சில குறைகளை கூட மறந்து படத்தை ரசிக்கும் மனநிலைக்கு பார்வையாளர்களை மாற்றி விடுகிறார். அவருக்கு ஒரு நல்ல கம்பேக்காக இந்த படம் அமையும்.
பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த ரிஷிகாந்த், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரியங்காவின் காதலராக இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்,
நம் ஊர் நடிகர்களை தாண்டி பார்க் ஹே-ஜின் (Park Hye‑jin), நோஹூ ஜின் (No Ho‑jin), ஜாங் ஜேஹியான் (Jang Jaehyeon) ஆகிய கொரியா நாட்டு நடிகர் இன்னும் சிறப்பாக நடித்து கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர், அதே போல் பிரியங்காவின் பெற்றோராக நடித்திருக்கும் நடிகர்களும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் பாடல்கள் இனிமையாகவும், பின்னணி இசை மென்மையாகவும் பயணித்து, எந்த இடத்தில் கேமரா வைத்தாலும் அழகாக தெரியும் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருந்தாலும், அந்த களங்களுடன் சேர்த்து கதாபாத்திரங்களையும் அழகாக காட்சிப்படுத்தி முழு படத்தையும் ரசிக்கும் படி ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார்.
இந்தப்படதை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் ரா.கார்த்திக்.வாழ்க்கையில் என்னதான் எதிர்மறையான சம்பவங்கள் நடந்தாலும், அவற்றை நேர்மறையான எண்ணத்தோடு எதிர்கொண்டால் அவை நம் வாழ்வை வசந்த காலமாக மாற்றும் என்ற நம்பிக்கையை விதைத்து வெற்றி பெற்றிருக்கிறார். கண்டிப்பாக இது அவருக்கு பல பாராட்டுகளை பெற்று தரும்.














