தொடரும் திரைப்பட விமர்சனம்

0
143

சென்னையில் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய மோகன்லால், ஒரு விபத்தால் அதனை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். மனைவி, ஒரு மகள், ஒரு மகன் என அளவான குடும்பம், அது தான் தன் உலகம் என்று வாழும் மோகன்லாலுக்கு அவரது பழைய அம்பாசிட்ட கார் மீதும் கொள்ளை பிரியம்.

இதற்கிடையே, மோகன் லால் ஊரில் இல்லாத போது, அவரது காரை போலீஸ் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்துவிடுகிறது. ஊரில் இருந்து திரும்பும் மோகன்லால் காரை மீட்க போராடுகிறார். காரை மீட்டாரா ? இல்லையா ? என்பதே படத்தின் கதை

மோகன்லால் என்ற நடிப்பு அரக்கனின் நடிப்பை எப்படி வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும், எந்த வகையில் வேண்டுமானாலும் ரசிக்கலாம். அப்படி ஒரு நடிப்பு ராட்சசனுக்கு இந்தப் படமும் சரியாகவே தீனி போட்டு இருக்கிறது.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு லாலேட்டனுடன் ஜோடி சேர்ந்திருக்கும் அவருடைய ஆஸ்தான, பிரியமான நாயகி ஷோபனா இந்த படத்திலும் தன்னுடைய அற்புதமான நடிப்பை காண்பித்து இருக்கிறார். சாதாரணமான மிடில் கிளாஸ் குடும்ப தலைவி கதாபாத்திரம் கடைசியாக போலீசாரின் தாக்குதலுக்கு உள்ளாகி பெரும் அவஸ்தைப்படும் நேரத்திலும் தன்னுடைய கோபத்தை கண்களாலேயே காட்டி எரித்து விடும் காட்சியில் அந்த சோபனாவின் கண்களுக்கும் ஒரு சல்யூட். அவருடைய நடிப்புக்கும் ஒரு சல்யூட்.

யார் அந்த இன்ஸ்பெக்டராக நடித்தவர் என்று இப்போது கேரளாவே கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு தன்னுடைய மிகச் சிறந்த நடிப்பை தன்னுடைய முதல் படத்திலேயே கொடுத்திருக்கிறார் இன்ஸ்பெக்டராக நடித்த பிரகாஷ் வர்மா.

பழனியாக நடித்திருக்கும் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சில காட்சிகளே ஆனாலும் மனதில் நிற்கும்படியான வேடத்தையே ஏற்றிருக்கிறார்.

மலையாள தேசமே ஒரு மண்ணும் மழையும் சார்ந்த பகுதிதான். படத்தின் துவக்கக் காட்சிகளிலேயே நிலச்சரிவு ஏற்பட்ட இடமும், வளைத்து வளைத்து செல்கின்ற அந்தப் பாதையும் இரவு நேரத்தில் பார்க்கும் பொழுதே அவ்வளவு அழகாக காட்சி அளிக்கிறது.

ஒளிப்பதிவாளர் மிகுந்த பிரயத்தனப்பட்டு, கஷ்டப்பட்டுத்தான் இந்தப் படத்தில் வேலை செய்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த அளவுக்கு தன்னுடைய கடின உழைப்பையும் கொடுத்திருக்கிறார். அவருடைய உழைப்புக்கேற்ற பலன் திரையில் தெரிகிறது. மழைக் காட்சிகளும், வெயில் காட்சிகளும் கட்டுக்குள் நடக்கும் திரில்லர் காட்சிகளும் சேர்ந்து ஒளிப்பதிவையும் ஒரு நடிகராகவே நமக்குக் காட்டியிருக்கிறது.

இரண்டு பாடல்களின் காட்சிகளை மாண்டேஜ் காட்சிகளாக வைத்து கதையை நகர்த்தி இருக்கின்றனர். பின்னணி இசையும் சோகத்தை பிழிந்து எடுத்து நம் மனதில் எங்கும் மூலையில் இருந்த அந்த சோக ரசனையை தட்டிவிட்டு, தூண்டிவிட்டு படத்துக்குள் நம்மை ஆழ வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

படத் தொகுப்பாளர் கொண்டு வந்து கொடுத்த அத்தனை காட்சிகளையும் எப்படி நெருக்கி எவ்வளவு அழகாக செய்ய முடியுமோ அந்த அளவுக்கு மிக அழகாக படைத்து ஒப்பனை செய்து இருக்கிறார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.

தமிழ்ப் படங்களை மட்டுமின்றி மலையாளப் படங்களிலும் இப்போது இளையராஜாவின் புகழ் பரப்பப்படுகிறது. இளையராஜாவின் பாடல்களையும் இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்காகவும் இந்தப் படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்..!

ஒரு அட்டகாசமான ஆக்சன், திரில்லர், சஸ்பென்ஸ் திரைப்படத்தை எந்த அளவுக்கு மிகச் சிறப்பான இயக்கத்தினால் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்திருக்கிறார் இயக்குநர் தருண் மூர்த்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here