I, Nobody திரை விமர்சனம்

0
31

பிருத்விராஜ் சுகுமாரன் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்து ஜூலை 10,2026-இல் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம் ‘ஐ, நோபடி’ (I, Nobody).

அரசு ஊழியராகவும், குடும்பஸ்தனாகவும் இருக்கும் சாமானிய மனிதன் ராஜீவன் (பிருத்விராஜ்). ஒருநாள் எதிர்பாராத விதமாக வங்கி ஒன்றில் நடக்கும் பெரிய கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையர்களின் பிணைக் கைதியாக மாட்டிக் கொள்கிறான். அவனைக் காட்டித் தப்பிக்கும் கொள்ளையர்கள் மூவரும் விபத்தில் இறந்துபோக, கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 16 கோடிக்கும் அதிகமான பணம் மாயமாகிறது. இதற்கிடையே, ஒரு யூடியூப் சேனல் சுயலாபத்திற்காக ராஜீவன் தான் இந்தக் கொள்ளையின் பின்னணியில் இருக்கும் மூளை என்று வதந்தியைப் பரப்புகிறது. இதனால் போலீஸ் மற்றும் ஊடகங்களின் பார்வை அவன் மீது திரும்புகிறது. உண்மையிலேயே ராஜீவன் அப்பாவி சாமானியனா அல்லது இந்த மர்மத்தின் பின்னணியில் இருக்கும் கிரிமினலா? அதன் பிறகு அவனது குடும்பம் என்ன ஆனது என்பதே ‘ஐ, நோபடி’ படத்தின் மீதிக்கதை.

பிருத்விராஜ் நிதானமான, ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது மௌனமான பார்வைகளும், மகளுடனான உரையாடல்களும் அருமை. Meera என்ற கதாபாத்திரத்தில் மனைவியாகவும் தாயாகவும் பார்வதி திருவோத்து மிகச்சிறந்த நடிப்பை தந்துள்ளார். முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜயராகவன், டி.எஸ்.பியாக நடித்திருக்கும் சங்கர் ராமகிருஷ்ணன், ஜேக்கப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோகன்,வங்கி கொள்ளை வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு அதிகாரியாக நடித்திருக்கும் மதுபால், பிரித்விராஜின் மூத்த மகளாக நடித்திருக்கும் ஜியா மற்றும் இளைய மகளாக நடித்திருக்கும் சிறுமி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் படத்திற்குப் பெரும் பலம்.

பிருத்விராஜின் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிக்கலையும், அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் நொடிக்கு நொடி விறுவிறுப்புடன் நகர்த்தியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. யாராலும் எளிதில் கணிக்க முடியாத திருப்பங்களுடன் கதையை கொண்டு சென்று, ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பை தக்க வைத்திருக்கும் இயக்குநர் நிஸாம் பஷீரின் திரைக்கதை அணுகுமுறை படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here