எல்.சண்முக சுந்தர் இயக்கத்தில், ராகவ் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி உள்ள ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம் பீப்’ (Beep).
நாயகன் ராகவ் ரங்கநாதன் ஒரு புகைப்படத்தைப் பார்த்தவுடன், அதற்குள் என்ன நடந்திருக்கும் என்பதை அறியும் வித்தியாசமான ஆற்றல் படைத்தவராக நடிக்கிறார். இந்தத் திறமையைக் கொண்டு அவர் ஒரு மர்மமான கொலையை எப்படிக் கண்டுபிடிக்கிறார், அதற்குக் பின்னால் உள்ள அறிவியல் மற்றும் உளவியல் என்ன என்பதுதான் படத்தின் கதை.
ராகவ் கதாபாத்திரத்தில் நடித்தவர் புத்திசாலித்தனமான உடல்மொழியுடன் சிறப்பாக நடித்துள்ளார். பாலியல் தொழிலாளி சுனைனா கதாபாத்திரத்தில் நடித்த யாமினி லக்ஷ்மணன், கவர்ச்சியிலும் நடிப்பிலும் குறைவில்லாமல் தன் பங்களிப்பை வழங்கியுள்ளார். காவ்யாவாக பிரேர்ணா கண்ணா மற்றும் பிற நடிகர்கள் கதையோட்டத்திற்கு உதவியுள்ளனர்.
பிரதீப் பத்ம குமார் ஒளிப்பதிவில் காட்சிகளும், கோணங்களும் மிக அழகாக, படத்துக்கு ஏற்ப அமைந்துள்ளது. பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. எடிட்டிங் கதையின் வேகத்தை ஒரே சீராகப் பராமரிக்க உதவியிருக்கின்றது.
இயக்குநர் எல். சண்முகசுந்தர் தலைப்பிலேயே கவனம் ஈர்க்கிறார். படத்தில் ஒரு காட்சியில் அந்த தலைப்பை உச்சரிக்கிறார்கள். அதை தாண்டி அந்த தலைப்பை வைத்ததற்கான காரணம் என்ன என்பது தான் புரியவில்லை. படத்தை பொறுத்த வரை ஒரு புதிய களத்தை தேர்ந்தெடுத்து சஸ்பென்ஸ் கலந்த ஒரு சைக்காலஜிக்கல் திரில்லரை வழங்க முயற்சி செய்துள்ளார். அதிக வன்முறை இல்லாத, புதிரான த்ரில்லர் படங்களை விரும்புபவர்கள் ‘பீப்’ திரைப்படத்தை ஒருமுறை கண்டிப்பாகப் பார்க்கலாம்.


