விரூபாக்‌ஷா விமர்சனம்

0
356

இரண்டு வாரங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கிறார்.

ஊரில் தொற்று வியாதி ஒன்று பரவுகிறது. இதற்கு காரணம் ஊரில் தனியாக வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் மாந்திரீக செயலில் ஈடுபட்டு மக்களை கொன்று வருகின்றனர் என்று நினைத்துக் கொள்கின்றனர் ஊர் மக்கள்.

இரவோடு இரவாக அந்த குடும்பத்தில் இருந்த கணவன் மற்றும் மனைவியை உயிரோடு மரத்தில் கட்டி வைத்து எரித்து விடுகிறார்கள்.

12 வருடங்கள் உருண்டோட, தனது தாயை அழைத்துக் கொண்டு தனது பூர்வீக கிராமமான அக்கிராமத்திற்கு வருகிறார் நாயகன் சாய் தரம் தேஜ். திருவிழா நடைபெறவிருப்பதால் ஊரே பூக்கோலம் பூண்டிருக்கிறது.

வந்த இடத்தில் நாயகி சம்யுக்தாவை காண, உடனே காதலில் விழுகிறார் சாய் தரம் தேஜ்.

மாயமாக சென்ற ஊரில் உள்ள பெரியவர் ஒருவர், திருவிழா அன்று கோவில் அம்மன் சிலை முன்பு நடந்து வந்து இறந்து விடுகிறார். இதனால் ஊரே தீட்டு பட்டு விட்டதாக கூறி அந்த ஊர் முழுவதையும் 8 நாட்களுக்கு மூடும்படி கூறிவிடுகிறார் கோவில் பூசாரி.

ஏதேச்சையாக, அதே ஊரில் தங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் சாய் தரம் தேஜ். ஊர் மூடப்பட்டாலும், அடுத்தடுத்து இரண்டு தற்கொலைகள் நடக்கிறது. இதனால் ஊரே அதிர்ச்சிக்குள்ளாக, இது தற்கொலை இல்லை கொலை தான் என்று கண்டுபிடிக்கிறார் சாய் தரம் தேஜ்.

இந்த கொலையை செய்தது யார்.? இந்த கொலைக்கும் மாந்திரீகத்திற்கும் என்ன சம்மந்தம்.? 12 வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட குடும்பத்தின் பழி வாங்கும் செயலா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் சாய்தரம்தேஜ், தெலுங்கிலிருந்து வந்திருக்கிறார். யுவதிகளைக் கவரும் அழகும் துடிப்பான நடிப்பும் அவருடைய பலம். முக்கியத்துவம் குறைந்த கதை என்றாலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

வாத்தியில் பார்த்த சம்யுக்தாதான் இந்தப்படத்தில் நாயகி.அமைதியாக மட்டுமின்றி முதல்நிலை நடிகைகள் போல் ஆக்ரோசமாகவும் வெளிப்பட்டிருக்கிறார். கதையின் மையமே நாம்தான் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ரவிகிருஷ்ணா, அஜய், சுனில் உட்பட படத்தில் நடித்திருக்கும் பலரும் பொறுப்பாக நடித்திருக்கிறார்கள்.

திகில் படங்களில் இரசிகர்களைப் பயமுறுத்தும் வேலையை ஒளிப்பதிவாளர் பார்த்துக்கொள்வார். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் சம்தத்தும் அதற்கு விதிவிலக்கல்ல.

அஜ்னீஷ் லோக்நாத் இசையில் பாடல் நன்றாக இருக்கிறது. காதல் காட்சிகளிலும் திகில் காட்சிகளிலும் அவருடைய பின்னணி இசை முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

தெலுங்கின் பிரபல இயக்குநர் சுகுமாரின் திரைக்கதைக்கு தமிழில் வசனங்கள் எழுதிய வி.பிரபாகர் புதுவண்ணம் தருகிறார்.

இயக்குநர் கார்த்திக்வர்மா டண்டூ, பழகிய கதை பார்த்த காட்சிகள் ஆகியவை பெரும்பான்மையாக இருந்தாலும் ஒரு சில இடங்களைத் தவிர காட்சிகளில் வேகம் மற்றும் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here