தேசிய விருது பெற்ற மலையாள எழுத்தாளர் சஜீவ் பழூர் இயக்கத்தில், கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘என்ன விலை’ (Enna Vilai).
ராமேஸ்வரத்தில் வரும் பக்தர்கள் தீர்த்தக் கிணற்றில் வீசும் நாணயங்களைச் சேகரித்து எளிய முறையில், அதே சமயம் சுயமரியாதையுடன் வாழும் ஒரு தொழிலாளி தவசி முத்து (கருணாஸ்). ஒருநாள் கடலுக்கு அடியில் இவருக்கு விலைமதிப்பற்ற தங்கப் பதக்கம் ஒன்று கிடைக்கிறது. அதை நேர்மையாகக் காவல்துறையிடம் ஒப்படைக்கச் செல்லும் தவசி முத்துவை, காவல்துறையும் அதிகார வர்க்கமும் சேர்ந்து நகைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைக்கிறது. செய்யாத குற்றத்திற்காகத் திருட்டு முத்திரை குத்தப்படும் ஒரு எளிய மனிதனின் மானத்திற்கு “என்ன விலை?” என்ற கேள்வியோடு, வழக்கறிஞராக வரும் நிமிஷா சஜயன் தவசி முத்துவிற்காக நீதிமன்றத்தில் எப்படிப் போராடுகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
அப்பாவி மீனவராக, தவிப்பும் இயலாமையும் நிறைந்த ஒரு எளிய மனிதராகக் கருணாஸ் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிறைக்குச் சென்ற பின் தன் குடும்பத்தை எண்ணி அவர் கண்ணீர் சிந்துமிடம் எதார்த்தமான வலியைத் தருகிறது. வழக்கறிஞராக வரும் நிமிஷா சஜயன், நீதிமன்றக் காட்சிகளில் கம்பீரமான நடிப்பை வழங்கிப் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளார். பூர்ணிமா பாக்யராஜ், பிரபு நிழல்கள் ரவி, மோகன் ராமன், மொட்டை ராஜேந்திரன் சேரன்ராஜ் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
சாம் சி.எஸ்-இன் பின்னணி இசை படத்தின் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. ஆல்பியின் ஒளிப்பதிவு ராமேஸ்வரத்தின் பின்னணியை மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது. இயக்குநர் சஜுவ் பாழூர் ராமேஸ்வரம் பிண்ணனியில் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்து அதை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார்.
