94 வயதான புகழ்பெற்ற இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சிங் கீதம்’
ஆந்திராவில் உள்ள ‘குபேரபுரம்’ என்ற வறண்ட கிராமத்தில் இருக்கும் தங்கச் சுரங்கத்தை அபகரிக்க கார்ப்பரேட் முதலாளிகள் முயல்கிறார்கள். கிராமத்தின் கடைசி மரத்தைப் பாதுகாக்கும் கௌரி (அஹில்யா பம்ரூ), பேராசை பிடிதவர்களிடமிருந்து கிராமத்தைக் காக்கப் போராடுகிறார். சுரங்கத்திற்காக அந்த மரம் வெட்டப்படும்போது ஏற்படும் ஒரு விசித்திரமான சம்பவமும், அதன் தொடர்ச்சியாக மனித பேராசைக்கு இயற்கை கற்பிக்கும் பாடமுமே படத்தின் மையக்கதை.
நாயகன் அயான், நாயகி அஹில்யா பம்ரூ ஆகியோர் தங்களின் சிறப்பான மற்றும் நேர்மையான நடிப்பால் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளனர். ஷாலினி கொண்டேபூடி, அழகாக இருப்பதோடு அளவான நடிப்பால் கவனம் பெறுகிறார். நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், நாயகனின் அப்பாக நடித்திருக்கும் ராகுல் ரவீந்திரன், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சிவ நாராயணா, பெனர்ஜி, வாம்சி ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் தோன்றும் விஜய் தேவரகொண்டா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
வறண்ட பாலைவனக் கிராமம் மற்றும் குபேரன் சிலை போன்றவற்றை தத்ரூபமாக உருவாக்கிய கலை இயக்குநர் அரவிந்த் மூலேயின் உழைப்பும், அன்குரின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளன. படம் முழுக்க வசனங்களே பாடல்களாக வருவதால், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது பின்னணி இசையாலும் பாடல்களாலும் கதையைத் தாங்கிப் பிடித்துள்ளார்.
‘சிங் கீதம்’ என்பது வணிக எல்லைகளைத் தாண்டி, தசாப்தங்களைக் கடந்த மாஸ்டர் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் அசாத்தியக் கற்பனையில் உருவான ஒரு தூய்மையான கலைப்படைப்பு. தியேட்டரில் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு புத்துணர்ச்சியான மற்றும் வித்தியாசமான சினிமா அனுபவம்.















