கும்கி 2 திரை விமர்சனம்

மலைகளுக்கு நடுவே செறிந்த காடுகளுக்கு உள்ளே இருக்கும் ஒரு கிராமத்தில் வாழும் பாசம் என்றால் என்ன என்றே அறியாத சிறுவன் ஒருவன். அப்பா இல்ல, அம்மா வேற ஒருத்தருடன் வாழறாங்க. அவங்க குடித்தனம்… சண்டை… இதெல்லாம் காரணமா, பையன் எப்பவும் தனிமையா இருக்கிறான். அந்த நேரத்தில்தான் ஒரு நல்ல ஆசிரியர் அவனுக்கு இயற்கை தான் நல்ல தோழன், அதை நேசிக்கணும் என்று சொல்லிக்கொடுப்பார். இப்படி வாழும் அவன் இயற்கை, வனவிலங்குகள் பறவைகள் பூச்சிகள் இவைகளை நேசிக்க ஆரம்பிக்கிறான்.

தந்தத்துக்காக யானைகளைக் கொல்லும் கூட்டம் ஒன்று, ஒரு காட்டு யானைக் கூட்டத்தில் ஒரு யானையை சுட்டுக் கொல்ல, மற்ற யானைகள் சிதறி ஓட, ஒரு குட்டி யானை ஒரு பள்ளத்துக்குள் விழுந்து விடுகிறது. குழியில் இருந்து ஏற முடியாமல் பலநாள் பட்டினியில் தவிக்கிறது யானை. காட்டில் பள்ளத்தில் சிக்கிய யானைக் குட்டியை நாயகன் மதி காப்பாற்றுகிறார். அதன்பின் மதியை அந்த யானை குட்டி விடாமல் துரத்துகிறது. இருவருக்கும் இடையில் நல்ல உறவு ஏற்பட இருவரும் இணைந்து பயணிக்கின்றனர். குட்டி யானை பெரிய யானையாக மாற நாயகனும் பெரியவனாகிறார். இருவருக்குமான உறவு அதிகமாக இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் திடீரென்று யானை காணாமல் போகிறது. எங்கு தேடி அலைந்தும் யானை கிடைக்கவில்லை. வறுத்தத்துடன் இருக்கும் சூழ்நிலையில் தனது ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் நாயகன் வெளி ஊருக்கு படிக்கச் செல்கிறான். ஐந்து ஆண்டுகள் படிப்பை முடித்து நாயகன் மதி திரும்பி வரும் போது அவனது காணாமல்போன யானையைப் பற்றிய தகவல் கிடைக்கவே மறுபடியும் அதை தேடி செல்கிறான். யானை காணாமல் போனதன் பின்னால் இருக்கும் காரணம் என்ன ? யானையை நாயகன் மதி கண்டுபிடித்தானா? இல்லையா? என்பதே கும்கி 2 படத்தின் மீதிக்கதை.

நாயகனாக அறிமுகமாகியிருக்கும் மதி நன்றாகவே நடித்துள்ளார். நல்ல எதிர்காலம் இருக்கு. நாயகியாக வரும் ஸ்ரிதா ராவ் ஒரிரு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். அர்ஜூன் தாஸ் நடிப்பும் அருமை. ஹரிஷ் பேரடி, ஆண்ட்ரூஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், சூஸன் ஜார்ஜ், ஶ்ரீதா ராவ் என இதில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளார்கள்.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

இயக்குநர் பிரபு சாலமன் யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை சொல்லியிருக்கிறார். இன்னும் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *