ராஜாகிளி திரை விமர்சனம்

0
90

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லத்தை நடத்தி வரும் சமுத்திரக்கனி, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், குப்பையில் இருப்பதை சாப்பிடும் தம்பி ராமையாவை அரவணைத்து தனது இல்லத்திற்கு அழைத்து வந்து பராமரிக்கிறார். அப்போது அவரிடம் இருக்கும் ஒரு டைரியை படிக்கும் போது, பல தொழில்களுக்கு சொந்தக்காரரான பெரும் செல்வந்தர் முருகப்பன் இவர் தான், என்பது தெரிய வருகிறது. யார் அந்த முருகப்பன்?, பெரும் செல்வந்தரான அவரது இத்தகைய நிலைக்கு காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

தம்பி ராமையாதான் ஹீரோ! “அட இவரா..” என்று நினைக்கவைக்காமல் சிறப்பாக நடித்து உள்ளார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில பரிதாபத்தை ஏற்படுத்தும் அவர், முதலாளியாக வரும்போது கம்பீரத்தை வெளிப்படுத்துகிறார். மொத்தத்தில் சிறப்பான நடிப்பு.அன்பகம் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை நடத்துபவராக சமுத்திரகனி. வழக்கம்போல அன்பான மனிதராக வருகிறார்.

தம்பி ராமையாவின் மனைவியாக வரும் தீபா எப்போதும் போல் காமெடி நடிப்பை அளித்து ரசிக்க வைக்கிறார். அதே நேரம் கடைசி காட்சியில் கணவனை மடியில் கிடத்தி புலம்பி, நம்மை கலங்கவைக்கிறார்.

தம்பி ராமையாவின் இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் சுபா, இளம் காதலியாக நடித்திருக்கும் சுவேதா ஸ்ரீம்ப்டான், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள்தாஸ், பழ கருப்பையா, டேனியல் அனி போப், பிரவீன் குமார்.ஜி, ரேஷ்மா, வெற்றிகுமரன், விஜே ஆண்ட்ருஸ், மாலிக், , கிரிஷ், கிங் காங் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் தம்பி ராமையாவின் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையமைத்திருக்கும் சாய் தினேஷ் பணி சிறப்பு.

ஒளிப்பதிவாளர்கள் கேதார்நாத் – கோபிநாத் ஆகியோரது கேமரா, முருகப்பனின் பணக்கார வாழ்க்கையையும், பசி மிகுந்த வாழ்க்கையையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

செல்வந்தர் முருகப்பனின் வாழ்க்கை மூலம் தொழில் உள்ளிட்ட பல துறைகளில் வெற்றி பெற்ற பிரபலங்களின் இல்லங்களில் நடமாடும் சந்தேகப் பேய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தனது கதை மற்றும் திரைக்கதை மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் தம்பி ராமையா, உண்மை சம்பவம் ஒன்றை பின்னணியாகக் கொண்டு படத்தை கமர்ஷியலாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் உமாபதி ராமையா..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here