சென்னைக்கு அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் பிப்ரவரி 8 அன்று மிக சிறப்பாக நடைபெறவுள்ளது

சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம் புதிய எருமைவெட்டிப் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் பிப்ரவரி 8 (தை 25) அன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த ஆன்மிக வைபவத்தில் திருமலை திருப்பதி பெரிய கேள்வியப்பன் சடகோப ராமாநுஜ பெரிய ஜீயர் ஸ்வாமிகளும், திருமலை திருப்பதி சிறிய கேள்வியப்பன் கோவிந்த ராமாநுஜ சின்ன ஜீயர் ஸ்வாமிகளும் கலந்து கொண்டு மங்களாசாஸனம் செய்ய உள்ளார்கள்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இத்திருக்கோயிலில் திருமலை அனந்தாண்பிள்ளை வம்சாவளியினரால் கடந்த ஐந்து தலைமுறைகளாக நித்ய பூஜைகள், உற்சவங்கள் முறைப்படி செய்யப்பட்டு வருகின்றன.

அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் வைபவத்திற்கான ஏற்பாடுகளை தக்கார்/உதவி ஆணையர் திரு மு. சிவஞானம், பரம்பரை அர்ச்சகர் திரு ஆர். வேங்கடக்ருஷ்ணன், செயல் அலுவலர் திரு மா. மாதவன், திருமலை அனந்தாண்பிள்ளை வம்சாவளியினர், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

ஸ்ரீமன் நாராயணன் எடுத்த அவதாரங்களில் ஶ்ரீராம அவதாரம் சிறந்ததாக போற்றப்படும் நிலையில், இராமபிரான் அர்ச்சாவதார திருக்கோலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் மகிஷாசுரமர்த்தனம் என்னும் எருமைவெட்டிப் பாளையம் மிகவும் பழமையும் பெரும் சிறப்புகளும் நிறைந்த திருத்தலமாகும்.

கொசஸ்தலை ஆற்றங்கரையில் 74 படிகள் கொண்ட மலையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் ஸ்ரீ ராமபிரான் சீதாப்பிராட்டியாரை தமது இடது மடியில் கொண்டு வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளக்கிராம திருமேனியாய் இளவல் ஸ்ரீ லக்ஷ்மணன் மற்றும் சொல்லின் செல்வர் ஸ்ரீ ஹனுமனுடன் எழுந்தருளி உள்ளார்.

சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருத்தலம் முன்னொரு காலத்தில் அடர்ந்த வனமாய் மகிஷன் எனும் அரக்கனின் பிடியில் இருந்தது. அப்போது கார்க்கேய முனிவர் அசுரனின் தொல்லைகளில் இருந்து மக்களை காக்க இங்குள்ள மலை மீது ஶ்ரீமன் நாராயணனரை வேண்டி தவம் மேற்கொண்டார்.

விடுதலைக்கு செவி சாய்த்து வனவாசத்தின் போது ராமபிரான் சீதாதேவியுடன் இப்பகுதிக்கு எழுந்தருளினார்.
சீதாதேவி இளைப்பாறுவதற்காக அங்கிருந்த ஆற்றில் நீராடச் சென்றபோது,
அசுரன் மகிஷன் அவரின் அழகில் மயங்கி தீண்ட முற்பட்டான். இதனால் மனம் கலங்கிய அன்னையார் ராமபிரானிடம் முறையிட்டாள்.
தேவியின் நடுக்கத்தைத் தணிக்க, ராமர் அவளைத் தனது இடது தொடையில் அமர்த்தி, அவரை அணைத்து, அவளது பதற்றத்தை ஆற்றினார்.

அப்போது முனிவரைப் போல் ஆயுதமின்றி இருந்த ராமபிரான்,
கையில் இருந்த ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அதன் நுனியைக் கிள்ளி எறிந்தார்.
அற்பமான அந்தப் புல், ராமரின் சங்கல்பத்தால் நான்கு மகாசக்திகளாக உருப்பெற்று
மகிஷனை வதம் செய்தது. மகிஷன் வதம் செய்யப்பட்டதால், இவ்விடம் ‘மகிஷ மர்த்தனம்’ என்றும்,
தமிழில் ‘எருமைவெட்டி பாளையம்’ என்றும் பெயர் பெற்றது.

மகிஷனை வதம் செய்த அந்த சக்திகளைச் சாந்தப்படுத்திய ராமர்,
அவர்களை அவ்வனத்தின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வங்களாக வீற்றிருந்து
மக்களைக் காக்குமாறு பணித்தார். அதன் படி இன்றும் அங்காள பரமேஸ்வரி, காட்டுகை காத்தம்மன்,
பொன்னியம்மன், மொளகாலம்மன் ஆகிய நான்கு தேவதைகள்
இக்கிராமத்தைக் காத்து வருகின்றனர்.

ராமரின் இந்த அபூர்வமான கோலத்தைக் கண்ட கார்க்கேய முனிவர்,
“இவ்விடத்தில் நீர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்” என்று
விண்ணப்பம் செய்தார். முனிவரின் விருப்பப்படி, ராமர், சீதா தேவியுடனும், தனது தம்பி லக்ஷ்மணனுடனும், ஹனுமனுடனும் அங்கே காட்சியளித்தார்.

பிற்காலத்தில், கார்க்கேய முனிவரின் வழிகாட்டுதலின் படி,
சோழ மன்னர் விக்ரம சோழன், நேபாளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட
அபூர்வமான சாளக்கிராம கல்லினால் ஸ்வாமி சிலைகளை வடித்து, இக்கோவிலை நிர்மாணித்தார்.

சாளக்கிராமக் கல்லால் ஆன இந்தத் திருமேனிக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு.
இத்தலத்தில் நாம் ஒருமுறை ‘ராம’ நாமம் சொல்லி மனமுருகி வேண்டினால்,
அது பல லட்சம் முறை பிரார்த்தனை செய்ததற்கு இணையான பலனைத் தரும் என்பது
ஐதீகம். மூன்று பௌர்ணமிகளுக்கு ஸ்வாமிக்கு நீல வஸ்திரம் சாத்தி,
நீல சங்குப் புஷ்பம் கொண்டு பூஜிப்பது,
வேண்டிய வரம் தரும் சிறப்பு வழிபாடாகும். அத்தகைய மகிமை வாய்ந்த கோதண்டராமரை வழிபட்டு,
அனைவரும் இப்பிறவியில் நன்மைகளைப் பெற மஹா ஸம்ப்ரோக்ஷணம் வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு பக்தர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *